
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41ஆவது லீக் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்னும், ரஜத் படிதார் 50 ரன்னும் எடுத்தனர்.
பின்னர், 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ஹெட் முதல் ஓவரிலேயே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து அபிஷேக் சர்மா 31 ரன்னிலும், எய்டன் மார்க்ரம் 7 ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிதிஷ் குமார் ரெட்டி 13, அப்துல் சமாத் 10 என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியாக ஆரம்பித்தார். 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் வெளியேற, ஷாபாஸ் அகமது நிதானமாக விளையாடி 37 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ஜெயதேவ் உனத்கட் 8 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதுவரையில் சொந்த மண்ணில் ஹைதராபாத் தோற்காத நிலையில், இந்தப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
இதுவரையில் ஒவ்வொரு போட்டியிலும் சிக்ஸரும், பவுண்டரியுமாக நொறுக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் இந்தப் போட்டியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். மேலும், அதிரடிக்கு பெயர் போன ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனை பார்த்த அணியின் துணை உரிமையாளர் காவ்யா மாறன் ஒவ்வொரு விதமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். இதுவரையில் இப்படியொரு ரியாக்ஷனை சினிமா நடிகர், நடிகைகள் கூட கொடுத்திருக்க மாட்டார்கள். அப்படியொரு ரியாக்ஷன் கொடுத்துள்ளார். காவ்யா மாறனின் ரியாக்ஷனை எக்ஸ் பக்கத்தில் பலரும் டிரோல் செய்து வருகின்றனர்.