பவுலிங்கில் சுருட்டிய குல்தீப்.. பேட்டிங்கில் மிரட்டிய ராகுல்!! இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

First Published Jul 4, 2018, 9:43 AM IST
Highlights
india big win in first t20 against england


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய விரும்பியதால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் ஜேசன் ராய் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட தொடங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளுடன் 11 ரன்களை குவித்தார் ராய். உமேஷ் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்தனர். 3 ஓவருக்கு 28 ரன்களை இங்கிலாந்து எட்டியது. 

பவர்பிளே ஓவராக இருந்தும் சோதனை முயற்சியாக சாஹலை வீச வைத்தார் கேப்டன் கோலி. சாஹல் வீசிய நான்காவது ஓவரை ராயும் பட்லரும் அடித்து நொறுக்கிவிட்டனர். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் எடுக்கப்பட்டன. அதிரடியாக ஆடி வந்த இந்த இணையை உமேஷ் யாதவ் பிரித்தார். 30 ரன்கள் எடுத்த ஜேசன் ராயை 5வது ஓவரில் போல்டாக்கி அனுப்பினார் உமேஷ் யாதவ்.

அதன்பிறகு பட்லருடன் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ், ரன் எடுக்க முடியாமல் திணறினார். ஆனால் மறுபுறம் பட்லர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்தார். திணறிய அலெக்ஸ் ஹேல்ஸை 8 ரன்களில் குல்தீப் யாதவ் வெளியேற்றினார். இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியதே, 14வது ஓவர் தான். 

குல்தீப் யாதவ் 14வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் மட்டும் இயன் மோர்கன், ஜோ ரூட், பேர்ஸ்டோ ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு பிரேக் கொடுத்தார். ஒரே ஓவரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியின் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி அசத்தினார் குல்தீப்.

அதன்பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. அரைசதம் கடந்த பட்லரையும் 69 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப். கடைசி நேரத்தில் டேவிட் வில்லே அதிரடியாக ஆடினார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

160 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், 4 ரன்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். எனினும் அதன்பிறகு ரோஹித் சர்மா - ராகுல் ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. ரோஹித் நிதானமாக ஆட, ராகுல் அதிரடியாக ஆடினார். இங்கிலாந்து அணியின் பவுலிங்கை பாரபட்சம் பார்க்காமல் அடித்து நொறுக்கினார்.

ரோஹித் 32 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு ராகுலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய ராகுல், சதமடித்து அசத்தினார்.

அவர் சதமடித்ததோடு அணியையும் அபார வெற்றி பெற செய்தார். இதையடுத்து இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராகுல் 101 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!