40 வருஷத்துக்கு முன்னாடி வெஸ்ட் இண்டீஸ் செஞ்சதை இப்போ செய்யுங்க.. இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசனை

First Published Jul 11, 2018, 5:24 PM IST
Highlights
glenn mcgrath idea to australian team to defeat india


இந்திய அணியை கோலியை வைத்து வீழ்த்த ஆஸ்திரேலிய அணிக்கு மெக்ராத் ஆலோசனை கூறியுள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் இல்லாமல் அந்த அணி திணறிவருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஒயிட் வாஷ் ஆன ஆஸ்திரேலியா, ஒரே ஒரு டி20 போட்டியிலும் தோற்றது. அதன்பிறகு ஜிம்பாப்வேவில் நடந்த முத்தரப்பு டி20 தொடரையும் இழந்தது.

ஆனால் இந்திய அணி அதற்கு எதிர்மாறாக நல்ல ஃபார்மில் உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்திய அணியின் இந்த ஃபார்ம், உலக கோப்பை தொடருக்கு உதவும். இங்கிலாந்தில் ஆடிவரும் இந்திய அணி, டி20 தொடரில் அபாரமாக ஆடி வென்றுள்ளது.

இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்று 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. நல்ல ஃபார்மில் இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முக்கிய சக்தியாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே சவால்களும் வார்த்தைப் போர்களும் தொடங்கிவிட்டன. சமகால கிரிக்கெட்டில் சிறந்த வீரரும், சாதனைகளை குவித்துவருபவருமான ரன் மெஷின் கோலிக்கு ஆஸ்திரேலிய பவுலர் பாட் கம்மின்ஸ் சவால் விடுத்தார். விராட் கோலியை எங்களுக்கு எதிராக சதமடிக்க விடமாட்டோம் என சவால் விடுக்கும் வகையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கோலியை வைத்து இந்திய அணியை வீழ்த்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலர் மெக்ராத் ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள மெக்ராத், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான தொடர் மிகவும் கடினமானதாக இருக்கும். கோலி ஆக்ரோஷமானவர். அவரது ஆக்ரோஷத்தை வரும் தொடரிலும் தொடருவார். அதனால் இந்த முறையும் போட்டிகள் விறுவிறுப்பாக அமையும்.


 
விராட் கோலிக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும். அதை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை பார்க்க வேண்டும். கோலிக்கு நெருக்கடி கொடுத்து அவரை விரைவில் வீழ்த்துவதன் மூலம் மற்ற வீரர்களுக்கும் நெருக்கடி கொடுத்து இந்திய அணியை வீழ்த்த முடியும். 1970களின் கடைசி மற்றும் 1980களின் தொடக்கத்தில் வலுவாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த உத்தியைத்தான் கடைபிடித்தது. அந்த அணி, எதிரணியின் கேப்டன் மீதும் சிறந்த வீரரின் மீதும் நெருக்கடியை கொடுத்து எதிரணியை வீழ்த்தும். நான் ஆடிய காலத்திலும் எதிரணியின் சிறந்த வீரருக்கு அழுத்தம் கொடுப்பேன்.

அதேபோல், ஆஸ்திரேலிய பவுலர்களால் கோலிக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தால் அது போட்டியில் கடும் விளைவை ஏற்படுத்தும் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
 

click me!