ரூட்டை தூக்கியாச்சு.. இனி நம்ம ரூட்டு கிளியர்!! அஷ்வின் சுழலில் அலறும் இங்கிலாந்து

First Published Aug 3, 2018, 4:42 PM IST
Highlights
england lost 3 wickets in secon innigs of first test


இங்கிலாந்து அணியின் கேப்டனும் சிறந்த டெஸ்ட் வீரருமான ஜோ ரூட்டையும் 14 ரன்களில் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் அஷ்வின். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை இந்திய அணியும் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணியும் வென்றன. இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. 

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்தது. இந்திய அணி விராட் கோலியின் அபார சதத்தால் 274 ரன்களை சேர்த்தது. இதையடுத்து நேற்றைய ஆட்டநேர முடிவிற்கு சற்று முன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் அலெஸ்டர் குக்கை ரன்  ஏதும் எடுக்கவிடாமல் வெளியேற்றினார் அஷ்வின். நேற்றைய ஆட்டநேர முடிவில் 9 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து இந்திய அணியை விட 22 ரன்கள் முன்னிலையில் இருந்தது இங்கிலாந்து அணி.

மூன்றாம் நாளான இன்று, ரூட்டும் ஜென்னிங்ஸும் களமிறங்கினர். 8வது ஓவரின்(இன்றைய நாளின் 4வது ஓவர்) 4வது பந்தில் ஜென்னிங்ஸை வீழ்த்தினார் அஷ்வின். அஷ்வினின் பந்தில் ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜென்னிங்ஸ்.

இதையடுத்து 15 ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரருமான ஜோ ரூட்டை அவுட்டாக்கினார் அஷ்வின். 14 ரன்கள் எடுத்த ரூட், அஷ்வினின் பந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் குவித்த ரூட்டை பந்துவீசி இந்திய அணியால் அவுட்டாக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் ரன் அவுட்டாகி ரூட் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய நம்பிக்கையான ரூட்டை வெளியேற்றி இந்திய அணியின் ரூட்டை கிளியர் செய்து கொடுத்திருக்கிறார் அஷ்வின். தற்போது பேர்ஸ்டோ மற்றும் மாலன் ஆடிவருகின்றனர். 3 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. 

முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.  
 

click me!