பெண்கள் மல்யுத்த்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் சாதனை … தங்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார் !!

By Selvanayagam PFirst Published Aug 21, 2018, 6:55 AM IST
Highlights

ஆசிய விளையாட்டுப் பெண்கள் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினோத் போகத் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார், ஆசிய விளையாட்டில் பெண்கள் மல்யுத்தத்தில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியா தலைநகரான ஜகார்த்தாவில்  தற்போது நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு   தென்கொரியாவில் நடைபெற்றது.

இந்த  ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பெற்றுத்தந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு 2-வது தங்கப்பதக்கமும் தற்போது மல்யுத்தத்திலேயே கிடைத்திருக்கிறது.



போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்கள் மல்யுத்தத்தில் (50 கிலோ, பிரிஸ்டைல் பிரிவு) இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது முதல் சுற்றில் 8-2 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யனன் சன்னை தோற்கடித்தார்.

இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் கால்இறுதியில் அவரிடம் மோதி காயத்துடன் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பழிதீர்த்துக் கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் கால்இறுதியில் 11-0 என்ற கணக்கில் தென் கொரியாவைச் சேர்ந்த ஹியன்ஜூ கிம்மையும் அரைஇறுதியில் 10-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த யாக் ஹிமுரடோவாவையும் வீழ்த்தினார்.

இதன் பின்னர் இறுதிப்போட்டியில் யுகி அரியை (ஜப்பான்) எதிர்கொண்ட வினேஷ் போகத் இதிலும் எதிராளியை மடக்கி பிரமாதப்படுத்தினார். முடிவில் 6-2 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் போகத் வெற்றி கண்டு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் பெண்கள் மல்யுத்தத்தில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அரியானாவைச் சேர்ந்த 23 வயதான வினேஷ் போகத், காமன்வெல்த் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கப்பட்டியலில் சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் 8 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 5 பதக்கத்துடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

click me!