சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று வங்கதேசத்துக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் போட்டியில் சதமடித்து, ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.
இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றிருந்தாலும், இன்று நடந்துவரும் 3வது ஒருநாள் போட்டி அந்த அணிக்கு கொடுங்கனவாக அமைந்துள்ளது. அந்த அணிக்கு இந்த போட்டியை கொடுங்கனவாக மாற்றியது, இஷான் கிஷனும் விராட் கோலியும்.
தாக்காவில் நடந்துவரும் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதிலாக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினார். டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங் ஆடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் - கோலி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 290 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அபாரமாக விளையாடிய விராட் கோலி, சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். 86 பந்தில் சதமடித்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44வது சதத்தை விளாசினார். கடைசியாக 2019 மார்ச் மாதம் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியில் இப்போதுதான் சதமடிக்கிறார்.
ஐபிஎல் 2023: Impact Player விதி இந்திய வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்..? தெளிவுபடுத்துமா பிசிசிஐ..?
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 72வது சதம் இதுவாகும். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை ரிக்கி பாண்டிங்குடன் பகிர்கிறார். ரிக்கி பாண்டிங்கின் சத சாதனையை சமன் செய்துள்ளார் கோலி. இன்னும் ஒரு சதம் அடித்தால், பாண்டிங்கை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை தனதாக்கிவிடுவார் கோலி. சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.