ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் இடம் பெற்று விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது.
சேலத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி பிறந்தவர் நடராஜன். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால், அதன் பிறகு ஒரே ஒரு நாள் போட்டியில் மட்டுமே விளையாடினார். கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். இதையடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான நடராஜன் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார். ஒரு டெஸ்டில் பங்கேற்ற நடராஜன் 3 விக்கெட்டுகளும், 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளும், 4 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளும் என்று மொத்தமாக 13 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். என்னதான் ஐபிஎல் தொடர்களில் சிறந்து விளங்கினாலும் ஒருமுறை கூட இந்திய அணியால் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஐபிஎல் தொடரில் பிரையன் லாரா கூட நடராஜனின் பவுலிங் திறமையை வியந்து பாராட்டி வந்தார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் மூலமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நடராஜன் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. இவர் மட்டுமின்றி தீபம் சஹரும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், மும்பை வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.
நீண்ட காலமாக காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பிரசித் கிருஷ்ணாவுக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் பந்து வீச்சாளர்களையும், பேட்ஸ்மேன்களையும் பட்டை தீட்டி வரும் நிலையில், இந்திய அணி இடது கை பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை மட்டும் நம்பியிருந்தது. இப்போது ஜெயதேவ் உனத்கட்டையும் அணியில் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.