
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தனது மணல் சிற்பத்தின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்கியது. இதில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்பட 10 அணிகள் இடம் பெற்று விளையாடின.
உலகக் கோப்பை தொடரின் 45 லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்திற்கு எதிராக நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதே போன்று தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது. இதில், இந்தியா வெற்றி பெற கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசியல், சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் தான் பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தனது மணல் சிற்பத்தின் மூலமாக இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பத்தின் மூலமாக உலகக் கோப்பையுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் வரைத்து இந்திய அணிக்கு குட் லக் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர், 500 ஸ்டீல் கிண்ணங்கள், 300 கிரிக்கெட் பந்துகள் கொண்டு 50 அடி நீளம் கொண்ட உலகக் கோப்பை ஓவியத்தை வரைந்துள்ளார். இதற்காக அவர் 6 மணீ நேரம் எடுத்துக் கொண்டுள்ளார்.