இந்தியாவிற்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியானது டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி தற்போது கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டது.
அதன்படி, வணிந்து ஹசரங்கா மற்றும் முகமது சிராஸ் இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஹமிந்து மெண்டிஸ் மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே இருவரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து பதும் நிசாங்கா மற்றும் அவிஷ்கா ஃபெர்னாண்டோ இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரில் முதல் பந்தில் நிசாங்கா 0 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த குசல் மெண்டிஸ், அவிஷ்கா உடன் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் குவித்தது.
இதில், ஃபெர்னாண்டோ 40 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் 30 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமா 14 ரன்னிலும், ஜனித் லியானகே 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சரித் அசலங்கா 25 ரன்னிற்கு நடையை கட்டினார். கடைசியில் வந்த் துணித் வெல்லாலகே மற்றும் கமிண்டு மெண்டிஸ் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். வெல்லாலகே 39 ரன்னிற்கு நடையை கட்டினார். இவர் தான் முதல் ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து இலங்கைக்கு நல்ல ஸ்கோர் எடுத்துக் கொடுத்தார்.
கமிண்டு மெண்டிஸ் 40 ரன்னில் ரன் அவுட்டானார். இறுதியாக அகிலா தனன்ஜெயா 15 ரன்னிற்கு ஆட்டமிழக்க இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் குவித்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றால் அனைவருக்கும் இலவச விசா – அட்லிஸின் நிறுவனர் மோஹக் நஹ்தா உறுதி!