நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 5 முறை தோல்வி அடைந்து 6ஆவது முறையாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 32ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இதில், குயீண்டன் டி காக் 114 ரன்களும், ரஸ்ஸி வான் டெர் டூசென் 133 ரன்களும் எடுத்தனர். டேவிட் மில்லர் 50 ரன்கள் குவித்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இதில், டெவான் கான்வே 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 9 ரன்களில் நடையை கட்டினார். வில் யங் 33 ரன்களிலும், கேப்டன் டாம் லாதம் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அப்போது, நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதன் பிறகு டேரில் மிட்செல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிட்செல் சான்ட்னர் 7, டிம் சவுதி 7, நீசம் 0, டிரெண்ட் போல்ட் 9 என்று வரிசையாக நடையை கட்டினர். கடைசி வரை இருந்த கிளென் பிலிப்ஸ் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். அவர், 50 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 60 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
NZ vs SA: குயீண்டன் டி காக், வான் டெர் டூசென் அதிரடி வேட்டை – தென் ஆப்பிரிக்கா 357 ரன்கள் குவிப்பு!
இறுதியாக, நியூசிலாந்து 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்து அதிகபட்சமாக 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளும், கெரால்டு கோட்ஸி 2 விக்கெட்டுகளும், கஜிசோ ரபாடா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த நிலையில் தான் உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் தொடர்ந்து 5 முறை முயற்சித்து கடைசியாக 6ஆவது முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.
இதற்கு முன்னதாக இரு அணிகளும் 8 முறை உலகக் கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 6 முறை நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 2 முறை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை போட்டிகளில் நியூசிலாந்து அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 1996 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக தென் ஆப்பிரிக்கா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே தென் ஆப்பிரிக்கா 2ஆவது பேட்டிங் செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த 5 போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி 300 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியில் 2ஆவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
New Zealand vs South Africa: டிம் சவுதியை களமிறக்கிய நியூசிலாந்து – டாஸ் வென்று பவுலிங்!