தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 20ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்திற்கு எதிராக அதிகபட்சமாக 399 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹெண்ட்ரிச் கிளாசென் 109 ரன்களும், மார்கோ ஜான்சென் 75* ரன்களும் எடுத்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஒவ்வொரு வீரரும் அடித்து ஆட முயற்சித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதலில் ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் 2 ரன்களிலும், டேவிட் மலான் 6 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக முன் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது இங்கிலாந்து 8.1 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்திருந்தது.
அதன் பிறகு வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 15 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தத்தளித்தது. அடுத்து சொல்லிக் கொள்ளும்படி இங்கிலாந்துக்கு யாரும் கை கொடுக்கவில்லை. அடில் ரஷீத் 10, டேவிட் வில்லி 12 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசில வந்த கஸ் அட்கின்சன் மற்றும் மார்க் வுட் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடவே இங்கிலாந்து ஓரளவு ரன்கள் சேர்த்தது. இவர்கள் இருவரும் இணைந்து 78 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலமாக இங்கிலாந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்திற்கு தள்ளப்படுவது தடுக்கப்பட்டது.
NED vs SL: நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்ற இலங்கை – புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேற்றம்!
ஒரு பவுலராக மார்க் வுட் அதிரடியாக விளையாடவே டிரெஸிங் ரூமில் இருந்த மற்ற வீரர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். கேசம் மகாராஜ் வீசிய ஓவரில் மட்டுமே 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி பறக்கவிட்டார். கடைசியில் அவரது ஓவரில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக மார்க் வுட் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உள்பட 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது அவரது அதிகபட்ச ஸ்கோராகும். கிஸ் அட்கின்சன் 21 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் ரீஸ் டாப்லே பேட்டிங் செய்ய வரவில்லை.
இறுதியாக இங்கிலாந்து 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து அதிகபட்சமாக 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து 3ஆவது இடத்தில் நீடிக்கிறது.