விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இக்கட்டான நேரத்தில் பென் ஸ்டோக்ஸை ரன் அவுட் முறையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 2ஆவது டெஸ்டில் பதிலடி கொடுக்கும் வகையில் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 253 ரன்கள் எடுத்தது. பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், நிதானமாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அவசரப்பட்டு இறங்கி அடிக்க முயற்சித்தி பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பென் ஸ்டோக்ஸ் அவரது கேட்சை பிடித்த மகிழ்ச்சியில் அவுட் என்பது போன்று விரலை காண்பித்தார்.
2ஆவது இன்னிங்ஸில் இந்தியா 255 ரன்கள் மட்டுமே எடுத்து 398 ரன்கள் முன்னிலை பெற்று 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்த நிலையில், தான் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியானது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதில், பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அப்போது களத்தில் பென் ஃபோக்ஸ் களத்தில் இருந்தார்.
இதில், அவர் அடித்து விட்டு ஓடி வர மிட் விக்கெட் திசையில் பீல்டிங்கில் நின்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் சரியாக பீல்டிங் செய்து பந்தை பிடித்து ஸ்டெம்பை நோக்கி வீசி எறிந்தார். இதில், ஸ்டோக்ஸ் வருவதற்குள்ளாக பந்தானது ஸ்டெம்பை பதம் பார்க்கவே பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பென் ஸ்டோக்ஸ் மட்டும் களத்தில் நின்றிருந்தால் அது இந்திய அணிக்கு சிக்கலாக இருந்திருக்கும். அவர் மட்டும் நின்று விளையாடியிருந்தால் அணியை வெற்றி பெறச் செய்திருப்பார். நல்ல வேளை ஷ்ரேயாஸ் ஐயர் அவரது விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். மேலும், ஸ்டோக்ஸிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு விரலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.