இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 499 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டில் சாதனையை கோட்டைவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத நிலையில் இந்த இன்னிங்ஸ் முடிந்தது. பின்னர் 143 ரன்கள் முன்னிலையில் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
இதில், சுப்மன் கில் 104 ரன்கள் எடுக்க, அக்ஷர் படேல் 47 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 255 ரன்கள் எடுத்து 398 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து 399 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து களமிறங்கியது. இதில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ஒரு புறம் ரன்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் முதல் விக்கெட்டை எடுக்க, அதன் பிறகு அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் முகேஷ் குமார் என்று ஒவ்வொருவரும் விக்கெட்டுகள் கைப்பற்றினர். இறுதியாக இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்கள் குவித்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கைப்பற்றாத நிலையில், 2ஆவது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் பென் டக்கெட், ஆலி போப் மற்றும் ஜோ ரூட் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 499 விக்கெட்டுகள் கைப்பற்றி ஒரு விக்கெட்டிற்காக கடுமையாக போராடிய நிலையில், 500 விக்கெட்டுகள் சாதனையை கோட்டைவிட்டார். எனினும், 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.