இங்கிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 76 ரன்கள் எடுத்தார்.
பின்னர், 143 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், சுப்மன் கில்லின் சதத்தால் இந்தியா 255 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 104 ரன்களும், அக்ஷர் படேல் 45 ரன்களும் எடுத்தனர். பின்னர் 399 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து பேட்டிங் செய்தது. இதில், 3ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழந்து 67 ரன்கள் எடுத்து விளையாடியது. இன்று 4 ஆம் நாளில் இங்கிலாந்து ஒருபுறம் அதிரடியாக விளையாடினாலும் மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
இன்றைய நாளில் அக்ஷர் படேல், ரெஹான் அகமது விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பிறகு வந்த ஆலி போப் அஸ்வின் பந்தில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அஸ்வின் பந்தில் நடையை கட்டினார். பும்ரா வேகத்தில் ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து முக்கியமான விக்கெட்டான பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட் முறையில் நடையை கட்டினார்.
இந்திய அணியின் எதிர்காலமே யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தான் – வீரேந்திர சேவாக் பாராட்டு!
பென் ஃபோக்ஸ் 36 ரன்களில் ஆட்டமிழக்க, டாம் ஹார்ட்லி 36 ரன்களில் கிளீன் போல்டானார். இறுதியாக இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 292 ரன்கள் மட்டுமே எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா 1-1 என்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணியைப் பொறுத்த வரையில் பும்ரா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டும், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடக்கிறது.