2023ல் இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பெறமாட்டார்; அவரது கெரியர், இஷான் கிஷனின் இரட்டை சதத்துடன் முடிந்துவிட்டது என்று கருதப்படும் நிலையில், அதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய இருபெரும் தொடர்களில் தோற்று ஏமாற்றமளித்தது. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் தோற்றது. எனவே அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு ரொம்ப முக்கியம்.
ஒருநாள் உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் அதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஒருநாள் உலக கோப்பைக்கு வலுவான அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதற்காக பல வீரர்களை பரிசோதித்துவருகிறது இந்திய அணி நிர்வாகம். டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு உட்பட கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், புதிய தேர்வாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
டி20 கிரிக்கெட் அறிமுகமான பின், ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளின் அணுகுமுறைகளும் மாறியுள்ளன. அதனால் இன்னும் பழைய அணுகுமுறையுடன் ஆடமுடியாது. முன்பெல்லாம் 300 ரன்களே பெரிய ஸ்கோராக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது 400 ரன்கள் அசால்ட்டாக அடிக்கப்படுகிறது.
எனவே அதற்கேற்ப இந்திய அணியும் அதிரடியான அணுகுமுறையை கையில் எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷிகர் தவான். ரோஹித் ஆரம்பத்தில் மெதுவாக ஆடி, பின்னர் களத்தில் நிலைத்தபின்னர் அடித்து ஆடக்கூடியவர். தவானும் பெரிதாக அடித்து ஆடக்கூடிய வீரர் கிடையாது. எனவே இந்திய அணி மிரட்டலான தொடக்கத்தை பெற முடியாததால் ஸ்கோரும் ஒரு குறிப்பிட்ட லெவலிலேயே அமைகிறது.
இந்நிலையில், இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயின் கவனத்தை ஈர்த்துள்ளார் இஷான் கிஷன். வங்கதேசத்துக்கு எதிராக தொடக்கம் முதலே அடித்து ஆடிய இஷான் கிஷன், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தையே இரட்டைசதமாக மாற்றினார். 126 பந்தில் இரட்டை சதமடித்து, 131 பந்தில் 210 ரன்களை குவித்தார். 36வது ஓவரிலேயே அவர் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் அதற்குள்ளாக 210 ரன்களை குவித்தார். இன்னும் 35-40 பந்துகள் பேட்டிங் ஆடியிருந்தால் முச்சதம் அடித்து வரலாற்ரு சாதனை படைத்திருப்பார். 50 ஓவரில் ஒரு அணியே அடிக்க கடினமான ஸ்கோரை ஒரு வீரர் அடித்திருப்பார்.
இந்த அபாரமான இன்னிங்ஸின் மூலம் தன்னை ஒருநாள் அணியில் புறக்கணிக்கமுடியாதபடி செய்துள்ளார் இஷான் கிஷன். இஷான் கிஷன் அதிரடியாக தொடங்கி, ரோஹித் சர்மா தனக்கான நேரத்தை எடுத்து, பின்னர் அதிரடியை கையில் எடுத்தால் இந்திய அணி மெகா ஸ்கோரை அடிக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் அணுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஒருநாள் அணியில் தொடக்க வீரராக ஆடிவரும் ஷிகர் தவானை தாண்டி யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
எனவே அடுத்ததாக நடக்கும் இலங்கை, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களில் இஷான் கிஷனை புறக்கணிக்க முடியாது. அதனால் தவான் அவரது இடத்தை இழக்க நேரிடும் என்று தெரிகிறது. மேலும் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை தொடர்களின் தொடர் தோல்விகளை அடுத்து சீனியர் வீரர்களை ஒதுக்கிவிட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவரவேண்டும் என்ற வலியுறுத்தல்களை வலுக்கச்செய்தது.
இந்நிலையில், ஷிகர் தவான் எதிர்காலம் பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்ட பின் தான் ஷிகர் தவானின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்கப்படும். அதேவேளையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவின் கருத்து கேட்டுத்தான் முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.