விராட் கோலி 200 சதங்கள் கூட அடிக்கட்டும்; ஆனால் இந்திய அணிக்கு தேவை உலக கோப்பை தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 2019 நவம்பருக்கு பின் சதமே அடிக்காமல் இருந்துவந்த விராட் கோலி, ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து மீண்டும் சத கணக்கை தொடங்கினார்.
அதன்பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் அது விராட் கோலியின் 44வது சதம். சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 72வது சதம். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங் (72) சாதனையை சமன் செய்தார்.
சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்துள்ளார். எனவே இன்னும் 6 சதங்கள் அடித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார். 72 சதங்கள் அடித்துள்ள கோலி இன்னும் 29 சதங்கள் அடித்தால், சச்சின் சாதனையை முறியடிக்கலாம்.
விராட் கோலி சச்சின் சாதனையை முறியடிப்பாரா மாட்டாரா என பேசப்பட்டுவரும் நிலையில், கோலி 100 சதம் அடிப்பதெல்லாம் முக்கியமல்ல. இந்திய அணி உலக கோப்பை ஜெயிப்பதே முக்கியம். அதைத்தான் இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்கிறார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்.. பென் ஸ்டோக்ஸ் அபார சாதனை
இதுகுறித்து பேசியுள்ள ரஷீத் லத்தீஃப், சதத்தின் எண்ணிக்கையெல்லாம் மேட்டரே கிடையாது. இந்திய அணிக்கு உலக கோப்பை தேவை. கோலி 100 சதங்கள் அடிக்கட்டும் அல்லது 200 சதங்கள் அடிக்கட்டும். அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இந்திய ரசிகர்கள் உலக கோப்பையை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். கோலி வேண்டுமென்றால், முடிந்தால் 100 சதங்கள் அடிக்கலாம். ஆனால் எதிர்பார்ப்பு வேறு.. ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலக கோப்பை, 2 டி20 உலக கோப்பைகளில் இந்திய அணி தோற்றிருக்கிறது. எனவே உலக கோப்பை ஜெயிப்பதே முக்கியம். அதுவே இந்திய அணியின் தேவையுமாகும் என்றார் ரஷீத் லத்தீஃப்.