டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஆண்ட்ரிச் நோர்ட்ஜேயின் கடைசி ஓவரில் மட்டும் ரியான் பராக் 25 ரன்கள் எடுத்தது போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 9ஆவது லீக் போட்டி தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 5 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் கிளீன் போல்டானார்.
பட்லரும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர், 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்கள் சேர்த்தனர். அஸ்வின் சிக்ஸர் அடித்து ஆரம்பித்து வைத்தார். நோர்ட்ஜே ஓவரில் மட்டும் அஸ்வின் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். ஆனால், அவர் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு துருவ் ஜூரெல் 20 ரன்களில் வெளியேற எஞ்சிய ஆட்டத்தை ரியான் பராக் தனியாக போட்டியை கொண்டு சென்றார். கடைசி ஓவரை ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசினார். அந்த ஓவரில் அதிரடியாக விளையாடிய பராக் 4, 4, 6, 4, 6, 1 என்று மொத்தமாக 25 ரன்கள் எடுத்தார். இது தான் போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு முன்னதாக 19 ஓவர்கள் வரையில் ராஜஸ்தான் ராயல்ஸ் 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதில், ரியான் பராக் 45 பந்துகளில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டெல்லி அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் கலீல் அகமது, முகேஷ் குமார், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.