
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். குறிப்பாக சிறந்த டெஸ்ட் வீரராக திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 94 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 30 சதங்கள், 4 இரட்டை சதங்கள், 37 அரைசதங்களுடன் 8709 ரன்களை குவித்துள்ளார் ஸ்மித்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபியில் ஸ்மித் ஆடிவருகிறார். இந்த டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்ல வேண்டுமென்றால் ஸ்மித் சிறப்பாக ஆடவேண்டும்.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 37 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 25 ரன்களும் மட்டுமே அடித்தார் ஸ்மித்.
டெல்லியில் இன்று தொடங்கிய 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.
ஸ்மித்தை களத்தில் நிலைக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை 2வது முறையாக டக் அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையைபடைத்தார் அஷ்வின். மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித்தை யாருமே 2 முறை டக் அவுட்டாக்கியதில்லை. 2020ல் மெல்பர்னில் நடந்த டெஸ்ட்டில் ஸ்மித்தை முதல் முறையாக டக் அவுட்டாக்கிய அஷ்வின், இந்த போட்டியில் 2வது முறையாக டக் அவுட்டாக்கினார்.