நேபாள் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் 342 ரன்கள் குவித்துள்ளது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்தும் 16ஆவது எடிஷனுக்கான ஆசிய கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதின. இது நேபாள் அணியின் முதல் ஆசிய கோப்பை. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேபாள் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது.
Paksitan vs Nepal: தனக்கு தானே ஆப்பு வச்சுக்கிட்ட முகமது ரிஸ்வான்; விரக்தியடைந்த பாபர் அசாம்!
நேபாள்:
ரோகித் பவுடல் (கேப்டன்), குஷால் புர்டெல், சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி, ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), குஷால் மல்லா, ஆரிஃப் ஷேக், தீபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி.
பாகிஸ்தான்:
ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஷரீஷ் ராஃப்
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் ரன் கணக்கை ஃபஹர் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் தொடங்கினர். இதில், முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜமான் பவுண்டரி அடித்தார்.
Nepal vs Paskitan: வரலாற்றில் முதல் முறையாக ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் நேபாள்!
எனினும், அவர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். நேபாள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கரண் கேசி அவரது விக்கெட்டை கைப்பற்றினார். இதே போன்று மற்றொரு தொடக்க வீரர் இமாம் ரன் அவுட் முறையில் 5 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 24ஆவது ஓவரை சந்தீப் லமிச்சனே வீசினார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் ரிஸ்வான் கவர் பாய்ண்ட் திசையில் பந்தை திருப்பி விட்டு ஓட முயன்றார், ஆனால், அங்கு பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த திபேந்திர சிங் பந்தை பிடித்து சரியான முறையில் ஸ்டெம்பை நோக்கி எறிய, பந்தானது ஸ்டெம்பில் படவே ரன் அவுட் முறையில் ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பிறகு அகா சல்மான் களமிறங்கினார். எனினும் அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து, இப்திகார் அகமது களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அவர் பாபர் அசாம் உடன் இணைந்து நேபாள் பந்து வீச்சாளர்களை திணற வைத்தார். பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். ஒரு கட்டத்தில் பாபர் அசாம் தனது 19ஆவது ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்ய, இப்திகார் அகமது தனது முதல் ஒரு நாள் போட்டி சதத்தை நிறைவு செய்தார்.
ஒரு கட்டத்தில் பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 151 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷதாப் கான் களமிறங்கினார். அவர் ஒரு பவுண்டரி அடித்த நிலையில் கடைசி பந்தில் கிளீன் போல்டானார். மறுபுறம் இப்திகார் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர், 71 பந்துகளில் 11 பவுண்டரி 4 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஒரு நிலையில், பாகிஸ்தான் 250 ரன்கள் எடுக்குமா என்ற கேள்வி இருந்த நிலையில், கடைசியாக பாபர் அசாம் மற்றும் இப்திகார் அதிரடியால் பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் குவித்துள்ளது. பந்து வீச்சைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் நிதானமாக ரன்கள் கொடுத்த நேபாள் வீரர்கள் அடுத்தடுத்து ரன்களை வாரி குவித்தனர். சோம்பால் கமி 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 2 விக்கெட் கைப்பற்றி 85 ரன்கள் விட்டுக் கொடுத்தார். சந்தீப் லமிச்சனே மற்றும் கரண் கேசி ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.