சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதியில் பஞ்சாப்பை வீழ்த்தி ஹிமாச்சல பிரதேசமும், விதர்பாவை வீழ்த்தி மும்பை அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
உள்நாட்டு கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டிகள் இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தன.
முதல் அரையிறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஹிமாச்சல பிரதேச அணியில் சுமீத் வெர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். சுமீத் வெர்மா 25 பந்தில் 51 ரன்கள் அடித்தார். அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஆகாஷ் வஸிஷ்ட் 25 பந்தில் 43 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் ஹிமாச்சல பிரதேச அணி 176 ரன்களை குவித்தது.
சுவாரஸ்யமான கட்டத்தில் டி20 உலக கோப்பை..! எந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும்..? ஓர் அலசல்
177 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் சிறப்பாக ஆடி 32 பந்தில் 45 ரன்கள் அடித்தார். அன்மோல்ப்ரீத் சிங் 30 ரன்கள் அடித்தார். மந்தீப் சிங் மற்றும் ராமன்தீப் சிங் ஆகிய இருவரும் தலா 15 பந்தில் 29 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் அணி நன்றாக போராடியபோதிலும் 20 ஓவரில் அந்த அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹிமாச்சல பிரதேச அணி ஃபைனலுக்கு முன்னேறியது.
அடுத்த அரையிறுதி போட்டியும் கொல்கத்தா ஈடன் கார்டனில் தான் நடந்தது. மும்பையும் விதர்பாவும் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணி 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அபாரமாக விளையாடிய ஜித்தேஷ் ஷர்மா 24 பந்தில் 46 ரன்கள் அடித்தார். வான்கடே 34 ரன்களும், அதர்வா டைட் 29 ரன்களும் அடித்தனர்.
165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா 21 பந்தில் 34 ரன்கள் அடித்தார். அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 44 பந்தில் 73 ரன்களை குவிக்க, 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி, ஃபைனலுக்கு முன்னேறியது.
வரும் சனிக்கிழமை(5ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனில் மும்பை - ஹிமாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடக்கிறது.