டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த மிட்செல் மார்ஷ் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இந்தப் போட்டியில் மட்டுமின்றி இன்னும் ஒரு சில போட்டிகளில் இடம் பெற மாட்டார் என்று பவுலிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான போட்டியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக விளையாடி வருகிறது. 10 அணிகள் இடம் பெற்ற இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 2 போட்டியில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மாறாக டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி 2 போட்டியில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. மூன்றாவது போட்டி இன்று கவுகாத்தி மைதானத்தில் நடக்கிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முதல் இரு போட்டிகளில் அணியில் இடம் பெற்றிருந்த மிட்செல் மார்ஷ் இந்தப் போட்டியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரோவ்மன் பவல் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அதற்கான காரணத்தை பவுலிங் பயிற்சியாளர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மிட்செல் மார்ஷிற்கு திருமணம் நடக்க உள்ள நிலையில், அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளார். திருமணம் முடிந்து புதுமாப்பிள்ளையாக ஒரு வாரத்தில் திரும்ப வருவார் என்று கூறியுள்ளார். ஆனால், அவரது திருமண தேதி, அவர் யாரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், மிட்செல் மார்ஷிற்கு தற்போது 31 வயதாகிறது. இதுவரையில் விளையாடிய முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். பந்து வீசவில்லை. 2ஆவது போட்டியில் 4 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இரண்டாவது போட்டியில் 3.1 ஓவர்கள் வீசிய மிட்செல் மார்ஷ் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளார். மிட்செல் மார்ஷை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. வரும் 11ஆம் தேதி மும்பை அணியை எதிர்கொள்கிறது. வரும் 15 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
IPL 2023: ஒரே ஒரு விக்கெட் காலியானதற்கு சட்டையெல்லாம் திறந்து போட்டு ஆட்டம் போட்ட காவ்யா மாறன்!