ஐபிஎல் 16வது சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண அதிக ஆர்வம் காட்டும்போதிலும், தோனி சற்று மேலே பேட்டிங் இறங்காமல் 8ம் வரிசையில் பேட்டிங் இறங்குவதற்கான காரணத்தை பயிற்சியாளர் மைக் ஹசி கூறியுள்ளார்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நாளையுடன் (மே 21) லீக் சுற்று போட்டிகள் முடிகின்றன. இன்று சிஎஸ்கே - டெல்லி இடையே நடந்துவரும் போட்டியுடன் சேர்த்து மொத்தமாகவே 4 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் பிளே ஆஃபிற்கு முன்னேற 3 அணிகளுக்கான இடங்கள் இன்னும் ஓபனாகவே உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. தலா 15 புள்ளிகளை பெற்றுள்ள சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் முறையே இன்று எதிர்கொண்டு ஆடும் டெல்லி மற்றும் கேகேஆரை வீழ்த்தி வெற்றி பெற்றால் பிளே ஆஃபிற்கு முன்னேறலாம். மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. எனவே கடைசி 4 போட்டிகள் மிக முக்கியமானவை.
பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி கட்டாயத்தில் சிஎஸ்கே அணி இன்று டெல்லியை எதிர்கொண்டு ஆடிவருகிறது. இந்த சீசன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கலாம் என்பதால் கோப்பையுடன் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறும் முனைப்பில் தோனி உள்ளார். சிஎஸ்கே அணி நிர்வாகமும் அதே எண்ணத்தில் தான் உள்ளது.
தோனியை கடைசியாக களத்தில் காண்கிறோம் என்பதை பறைசாற்றும் விதமாகத்தான் சிஎஸ்கே அணி எந்த ஊருக்கு சென்று ஆடினாலும் அங்கு ரசிகர்கள் சிஎஸ்கே ஜெர்சியில் வந்து தோனிக்கு ஆதரவளித்தனர். தோனியின் பேட்டிங்கை இனி பார்க்க முடியாது என்பதால் இந்த சீசனில் அவரது பேட்டிங்கை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். அதனால் தான் ஜடேஜா ஒவ்வொருமுறை ஆட்டமிழந்தபோதெல்லாம் அடுத்ததாக தோனி களமிறங்கப்போகும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
ஆனாலும் தோனி இந்த சீசன் முழுக்க 8ம் வரிசையில் கடைசி ஒன்றிரண்டு ஓவர்களில் தான் களத்திற்கு வருகிறார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், அவர் ஆடும் ஒருசில பந்துகளில் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை மகிழ்விக்கிறார்.
ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்
சிஎஸ்கே அணி டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக கடைசி லீக் போட்டியை ஆடிவரும் நிலையில், தோனி 8ம் வரிசையில் இறங்குவது குறித்து பேசிய சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி, தோனி கடைசி ஒருசில ஓவர்களில் மட்டுமே பேட்டிங் ஆட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.அதுதான் அவரது திட்டமும் கூட. அவரது முழங்கால் 100 சதவிகிதம் ஃபிட்டாக இல்லை. முழங்கால் வலியால் அவதிப்படுகிறார். அதனால் 11-12வது ஓவரில் களத்திற்கு வந்தால் அவரால் தொடர்ச்சியாக ரன் ஓடமுடியாது. இந்த சீசன் முழுக்க எந்த பிரச்னையும் இல்லாமல் ஆடி முடிக்க விரும்புகிறார். அதனால் தான் முழங்காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்பதற்காக கடைசி ஒருசில ஓவர்களில் மட்டும் பேட்டிங் ஆடுகிறார் என்று மைக் ஹசி தெரிவித்தார்.