இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய வங்கதேச அணி, மெஹிடி ஹசனின் அபார சதம் (100) மற்றும் மஹ்மதுல்லாவின் பொறுப்பான அரைசதத்தால்(77) 50 ஓவரில் 271 ரன்களை குவித்து, 272 ரன்கள் என்ற கடின இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது இந்திய அணி.
தாக்காவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷபாஸ் அகமது, குல்தீப் சென் நீக்க்ப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
நான்கரை வருஷத்துக்கு பின் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித்
வங்கதேச அணி:
நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ் (கேப்டன்), அனாமுல் ஹக், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், நசும் அகமது, எபாடட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் (11), லிட்டன் தாஸ் (7) ஆகிய இருவரையும் சிராஜ் வீழ்த்த, 3ம் வரிசையில் இறங்கிய நஜ்முல் ஹுசைனை (21) உம்ரான் மாலிக் வீழ்த்தினார். ஷகிப் அல் ஹசன் (8), முஷ்ஃபிகுர் ரஹிம் (12), அஃபிஃப் ஹுசைன்(0) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த,19 ஓவரில் 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி.
அதன்பின்னர் மஹ்மதுல்லாவும் மெஹிடி ஹசனும் ஜோடி சேர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். இக்கட்டான சூழலில் வங்கதேச அணி இருந்தநிலையில், பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தாக வேண்டும் என்பதை உணர்ந்து மஹ்மதுல்லா - மெஹிடி ஹசன் ஜோடி பொறுப்புடன் பேட்டிங் ஆடி, 7வது விக்கெட்டுக்கு 148 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய மஹ்மதுல்லா 77ரன்களுக்கு 47வது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வங்கதேசத்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த மெஹிடி ஹசன், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.
ICC WTC புள்ளி பட்டியல்: பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவிற்கு ஃபைனல் வாய்ப்பு..!
83 பந்தில் சதமடித்த மெஹிடி ஹசன், கடைசி வரை களத்தில் நின்று வங்கதேச அணிக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 19 ஓவரில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய வங்கதேச அணி, மெஹிடி ஹசனின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 271 ரன்களை குவித்து, 272 ரன்கள் என்ற கடின இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆடுகளத்தில் கடந்த போட்டியில் 187 ரன்களை அடிக்கவே வங்கதேசம் கஷ்டப்பட்டது. எனவே 272 ரன்கள் என்பது இந்திய அணிக்கு இந்த ஆடுகளத்தில் விரட்ட கண்டிப்பாகவே கடின இலக்காக இருக்கும்.