பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டி இன்று பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் தான் கடந்த ஆண்டு முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு முதல் முறையாக பஞ்சாப் அணியின் ஹோம் மைதானம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மொஹாலியின் முல்லன்பூர் பகுதியில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் முதல் முறையாக ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த மைதானம் கிட்டத்தட்ட 41.95 ஏக்கரில் ரூ.230 கோடி பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மைதானம் சுமார் 38,000 இருக்கைகள் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் தான் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்த மைதானத்தில் இதற்கு முன்னதாக சையது முஷ்டாக் அலி டிராபி தொடர் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் 9 டி20 போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி தான் 7 போட்டியிலும், 2ஆவது பேட்டிங் செய்த அணி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. அதிகபட்ச ஸ்கோர் 225/3. குறைந்தபட்ச ஸ்கோர் 74 ரன்களும். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளுமே தலா 16 போட்டிகளில் போட்டியுள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 231 ரன்களும் ஆகும். இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 202 ரன்கள் ஆகும்.