
இந்தியாவில் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில் நியூசிலாந்து விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று இந்திய அணியும் விளையாடிய 4 போட்டியிலும் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது தனது முதல் ஓவரை வீச வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறி ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றார். பரிசோதனையில் அவர் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவக் குழு அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக நாளை தரம்சாலா மைதானத்தில் நடக்க இருக்கும் போட்டிக்காக சென்ற இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை.
மேலும், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். ஆதலால் அவருக்குப் பதிலாக இந்திய அணியின் தேர்வில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், சூர்யகுமார் யாதவ் பயிற்சியின் போது மணிக்கட்டு பகுதியில் காயம் அடைந்துள்ளார். வலியால் துடித்த அவர் பயிற்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார். அதன் பிறகு அவருக்கு ஐஸ் பேக் சிகிச்சை அளிக்கப்படவே எந்த பாதிப்பும் இல்லை என்றும், எக்ஸ்ரே பரிசோதனையும் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க, பயிற்சியின் போது இஷான் கிஷானுக்கு தேனீ கடித்துள்ளது. இதன் காரணமாக அவர் அவசர அவசரமாக பயிற்சியை முடித்துக் கொண்டு டிரெஸிங் ரூமிற்கு சென்றதாக சொல்லப்படுகிறது. எனினும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து எந்த தகவல் இல்லை.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் 2 போட்டிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சுப்மன் கில்லிற்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெற்று விளையாடினார். முதல் போட்டியில் டக் அவுட்டில் வெளியேறிய நிலையில், 2ஆவது போட்டியில் 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஆதலால், நாளை நடக்கும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை என்றால், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் இடம் பெறவும் வாய்ப்பு உண்டு. இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறந்த வீரர் தேவை என்றால் அதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் சரியான தேர்வாகவும் இருப்பார் என்றூ சொல்லப்படுகிறது.
NED vs SL: நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றி பெற்ற இலங்கை – புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேற்றம்!