ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் 100 வெற்றி பெற்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக முகமது நபி 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் சேர்க்க, ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. பின்னர், எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். சுப்மன் கில் 23 ரன்களிலும், திலக் வர்மா 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆல்ரவுண்டரான ஷிவம் துபே கடைசி வரை நின்று இந்திய அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இந்தப் போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 2ஆவது அரைசதம் அடித்தார். அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸ் உள்பட 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ரிங்கு சிங் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசில பயம் காட்டிய நபி, அசால்ட்டா தூக்கிய முகேஷ் குமார் – ஆப்கானிஸ்தான் 158 ரன்கள் குவிப்பு!
இறுதியாக இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக டி20 போட்டியில் 100 வெற்றிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதுவரையில் 149 டி20 போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 100 வெற்றிகளை பெற்றுள்ளார். இதில் கேப்டனாக 52 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுள்ளார்.
மொஹாலியில் கடும் குளிர் – ஹாட் வாட்டர் பேக் பயன்படுத்திய இந்திய வீரர்கள்!
டி20 வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற அணிகளில் ரோகித் சர்மா 100ஆவது வெற்றியை பெற்றுள்ளார். சோயிப் மாலிக் 86 வெற்றிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.