ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிவேகமாக 550 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 72 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதில், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்த ரோகித் சர்மா 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தனது 52ஆவது ஒரு நாள் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலமாக தொடக்க வீரராக தனது 39ஆவது அரைசதம், ஹோம் மைதானத்தில் 19ஆவது அரைசதம், கேப்டனாக 11ஆவது அரைசதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9ஆவது அரைசதம், இந்த ஆண்டில் 6ஆவது அரைசதம், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் 2ஆவது அரைசதம் அடித்துள்ளார்.
கடைசியாக ரோகித் சர்மா 57 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உள்பட 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 6 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 550 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரையில் 52 டெஸ்ட், 248 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 148 டி20 போட்டிகள் என்று மொத்தமாக 548 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ரோகித் சர்மா 550 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் 548 போட்டிகளில் விளையாடி 553 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். கெயிலின் இந்த 553 சிக்ஸர்கள் சாதனையை உலகக் கோப்பையில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 2332 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 3077 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி 2228 ரன்கள் எடுத்துள்ளார். ஹோம் மைதானங்களில் நடந்த சர்வதேச போட்டிகளில் அனைத்து பார்மேட்டுகளிலும் ரோகித் சர்மா 259 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். கெயில் 228 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS, 3rd ODI: இஷான் கிஷானுக்கு வைரஸ் காய்ச்சல்: ரோகித் – விராட் கோலி தான் ஓபனிங்கா?