நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா பேட்டிங் செய்து வரும் நிலையில் போட்டியின் நடுவில் மைதானத்தை புகை சூழ்ந்து கொண்ட நிலையில் பந்து கண்ணுக்கு தெரியாததால் இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 21ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலாவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது. இதில், டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பவுலர்களைப் பொறுத்த வரையில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
India vs New Zealand: ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சுப்மன் கில் சாதனை!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்க கொடுத்தார். அவர் இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் விளையாடி 311 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
மேலும், இந்த ஆண்டில் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் 50 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அஃப்ரிடி 48 சிக்ஸர்கள் அடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு கிறிஸ் கெயில் 56 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதே போன்று 2015 ஆம் ஆண்டுகளில் ஏபி டிவிலியர்ஸ் 58 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய அணி 100 ரன்கள் எடுத்திருந்த போது மைதானம் முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சி தந்தது. இதன் காரணமாக பந்து கண்ணுக்கு தெரியாத நிலையில் பேட்டிங் செய்ய முடியாமல் ஷ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னிலும் மற்றும் விராட் கோலி 7 ரன்னிலும் மைதானத்தில் இருந்தனர். எனினும், சிறிது நேரத்திற்கு பிறகு போட்டியானது தொடங்கப்பட்டது.