நியூசிலாந்திற்கு எதிரான 21ஆவது உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்ததன் மூலமாக அதிவேகமாக 2000 ரன்களை கடந்து தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹசீம் ஆம்லாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் இளவரசர் என்று அழைக்கப்படும் சுப்மன் கில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 21ஆவது லீக் போட்டி தற்போது தரம்சாலா மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஜோடி அதிரடியாக விளையாடி 3 ஆவது விக்கெட்டிற்கு 159 ரன்கள் குவித்தது. இதில், ரவீந்திரா 75 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை அதிரடி காட்டிய டேரில் மிட்செல் தன் பங்கிற்கு 130 ரன்கள் குவித்தார். இறுதியாக நியூசிலாந்து 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்தது.
இதில் இந்திய அணியின் பவுலிங்கைப் பொறுத்து முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்தப் போட்டியில் சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்திருந்த போது அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர் எண்ற சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் கில் 38 இன்னிங்ஸில் விளையாடி 2000 ரன்களை கடந்து ஹசீம் ஆம்லாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஆம்லா 40 இன்னிங்ஸ் விளையாடி 2000 ரன்கள் எடுத்திருந்தார்.
ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்தவர்கள் (இன்னிங்ஸ்):
38 இன்னிங்ஸ் – சுப்மன் கில்
40 இன்னிங்ஸ் – ஹசீம் ஆம்லா
45 இன்னிங்ஸ் – ஜாஹீர் அப்பாஸ்
45 இன்னிங்ஸ் – கெவின் பீட்டர்சன்
45 இன்னிங்ஸ் – பாபர் அசாம்
45 இன்னிங்ஸ் - ரஸ்ஸி வான் டெர் டுசென்
IND vs NZ: ஜடேஜா விட்ட கேட்சால் வந்த விபரீதம் – ரச்சின் ரவீந்திரா அரைசதம் அடித்து அசத்தல்!
மேலும், இளம் இந்திய வீரராக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்தவர்கள்:
20 வயது, 354 நாட்கள் – சச்சின் டெண்டுல்கர்
22 வயது, 51 நாட்கள் – யுவராஜ் சிங்
22 வயது, 215 நாட்கள் – விராட் கோலி
23 வயது, 45 நாட்கள் – சுரேஷ் ரெய்னா
24 வயது, 44 நாட்கள் – சுப்மன் கில்
எனினும், கில் 31 பந்துகளில் 5 பவுண்டரி 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.