இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதே போன்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. முதல் கட்டமாக இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தற்போது பல்லேகலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷிவம் துபே, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், ரியான் பராக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்திய அணி பேட்டிங் செய்து 20 ஓவர்களில் ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.
முதல் 5 ஒவர்களில் 59 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 6ஆவது ஓவரில் ஒரு விக்கெட் இழந்து 74 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 21 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இந்தப் போட்டியில் 22ஆவது பந்தில் தனது 20ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். எனினும் அவர் 26 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 58 ரன்களில் நடையை கட்டினார்.
இவரைத் தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரியான் பராக் 7 ரன்னிலும் நடையை கட்டினார். கடைசியில் ரிஷப் பண்ட் 33 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 49 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ரிங்கு சிங் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அக்ஷர் படேல் கடைசியாக ஒரு சிக்ஸர் அடிக்கவே இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது.
இலங்கை அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மதீஷா பதிரனா 4 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவர் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார். தில்ஷன் மதுஷங்கா, வணிந்து ஹசரங்கா மற்றும் அசித் ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.