டி20 உலக கோப்பை: பயிற்சி போட்டியில் இலக்கை விரட்ட முடியாமல் படுதோல்வி அடைந்த இந்தியா

டி20 உலக கோப்பைக்கு முந்தைய பயிற்சி போட்டியில் இன்று மேற்கு ஆஸ்திரேலியா லெவனை எதிர்கொண்ட இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

india lost to western australia xi in warm up match ahead of t20 world cup

டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் மற்ற 2 அணிகளை சூப்பர் 12 சுற்றில் எதிர்கொண்டு ஆடுகிறது.

கடந்த 6ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு சென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஆடிவருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டிகளில் இனிமேல் ஆடவுள்ளது. அதற்கு முன்பாக மேற்கு ஆஸ்திரேலியா லெவனுக்கு எதிராக 2 பயிற்சி போட்டிகளில் ஆடியது.

Latest Videos

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்த 4 அணிகள் தான் மோதும்..! ரவி சாஸ்திரி அதிரடி

முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்று நடந்த பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகிய முக்கியமான வீரர்கள் பேட்டிங் ஆடவில்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய மேற்கு ஆஸ்திரேலியா லெவன் அணியின் தொடக்க வீரர் டார்ஷி ஷார்ட்(52) மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய நிக் ஹாப்சன்(64) ஆகிய இருவரின் அரைசதத்தால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது மேற்கு ஆஸ்திரேலியா லெவன் அணி.

169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் கேஎல் ராகுலும் ரிஷப் பண்ட்டும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்க தினேஷ் கார்த்திக்குடன் போட்டியிடும் ரிஷப் பண்ட் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் வீணடிக்கிறார். இந்த போட்டியில் ஓபனிங்கில் ஆட வாய்ப்பு கிடைத்தும் வெறும் 9ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தீபக் ஹூடா 6 ரன்களுக்கு நடையை கட்டினார்.

ஹர்திக் பாண்டியா 9 பந்தில் 17 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அக்ஸர் படேல் (2) மற்றும் தினேஷ் கார்த்திக்(10) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய தொடக்க வீரர் கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். 55 பந்துகளில் 74 ரன்களை ராகுல் அடித்தாலும் அவரால் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க முடியவில்லை. 19வது ஓவரின் 2வது பந்தில் அணியின் ஸ்கோர் 128 ரன்களாக இருந்தபோது ஆட்டமிழந்தார். அவர் களத்தில் கடைசிவரை நின்றிருந்தாலும் கூட, இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்திருப்பது கஷ்டம் தான்.

இதையும் படிங்க - பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் நிறைவு.. மௌனம் கலைத்த கங்குலி

20 ஓவரில் 132 ரன்கள் மட்டுமே அடித்த இந்திய அணி 36 ரன்கள் என்ற பெரிய வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் பவுலிங்கை பொறுத்தமட்டில் அஷ்வின் 4 ஓவரில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். ஹர்ஷல் படேல் 4 ஓவரில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் 2 ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார்; விக்கெட் வீழ்த்தவில்லை. அர்ஷ்தீப் சிங் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image