நெதர்லாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 45ஆவது மற்றும் கடைசி லீக் போட்டி இன்று நடக்கிறது. இதில், புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்தியாவும், கடைசி இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
போதும் நீங்க விளையாடி கிழிச்சது – ஓரங்கப்பட்டப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்!
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதே அணியுடன் இன்றைய போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டிக்குப் பிறகு வரும் 15 ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் நேற்று பெங்களூருவில் உள்ள ஹோட்டலில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதே போன்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நெதர்லாந்து அணியில் இன்றைய போட்டியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதே அணியுடன் களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் நெதர்லாந்து வெற்றி பெற்றால் வரும் 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு நெதர்லாந்து தகுதி பெறும். இந்தியா வெற்றி பெற்றால் வங்கதேச அணி தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீரர் டிம் டி லீட் 9.5 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து சச்சின், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் ஆகியோரது விக்கெட்டுகள் என்று மொத்தமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த உலகக் கோப்பையில் மட்டும் டிம் டி லீட் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதே போன்று தற்போது இவரது மகனான பாஸ் டி லீட் இந்த உலகக் கோப்பையில் 14 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இன்று நடக்கும் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியில் இடம் பெற்று பாஸ் டி லீட் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
நெதர்லாந்து:
ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மேக்ஸ் ஓ'டவுட், பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, பால் வான் மீகெரென், கொலின் அக்கர்மேன், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தத், வெஸ்லி பாரேசி, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்.