இந்திய ஸ்பின்னர்களிடம் மண்டியிட்டு சரணடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்.! கடைசி டி20யிலும் இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Aug 8, 2022, 8:55 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-1 என டி20 தொடரை வென்றது இந்திய அணி.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3-1 என இந்திய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி ஃப்ளோரிடாவில் நடந்தது.

ஏற்கனவே இந்த தொடரை வென்றுவிட்டதால், இந்த தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பளிக்கும் விதமாக கேப்டன் ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்தார். 

ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - தங்கம் வென்றது வீராங்கனை.. கொண்டாடப்பட்டதோ முதலமைச்சர்..! சர்ச்சையில் சிக்கிய விளையாட்டு ஆணைய தலைவர்

இந்திய அணி:

இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷமர் ப்ரூக்ஸ், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன் (கேப்டன்), டெவான் தாமஸ் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர், ஒடீன் ஸ்மித், கீமோ பால், டோமினிக் டிரேக்ஸ், ஒபெட் மெக்காய், ஹைடன் வால்ஷ், ரோவ்மன் பவல்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரராக இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் ஷ்ரேயாஸ் ஐயர் 64 ரன்கள் அடித்தார். ஆனால் இஷான் கிஷன் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். தீபக் ஹூடா 25 பந்தில் 38 ரன்களும், தினேஷ் கார்த்திக் 16 பந்தில் 28 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையும்  படிங்க - ஒரு வசதியும் செய்து கொடுக்கல.. இப்ப வாழ்த்து சொல்றீங்க! அரவிந்த் கேஜ்ரிவாலை சங்கடப்படுத்திய மல்யுத்த வீராங்கனை

189 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய ஸ்பின்னர்கள் அக்ஸர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் குல்தீப் யாதவின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து பேட்ஸ்மேன்களும் இவர்கள் மூவரிடமே விக்கெட்டுகளை இழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மயர் மட்டுமே பொறுப்புடன் ஆடி 36 பந்தில் 56 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாமல் மிகச்சொற்ப ரன்களில் வெளியேறியதால் 15.4 ஓவரில் வெறும் 100 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ்.

இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4-1 என டி20 தொடரை வென்றது.
 

click me!