தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்படவே, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறா வேண்டியது. மழையின் காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. கடைசியாக 3ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-1 என்று தொடரை சமன் செய்தது.
டி20 போட்டியைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-1 என்று சமன் செய்திருந்தது. இந்த நிலையில் தான் தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசியது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணிக்கு திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று தனது 16ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் தனது முதல் சதத்தை பதிவு செய்து 108 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியாக ரிங்கு சிங் 38 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்தியா 296 ரன்கள் குவித்தது.
பின்னர், கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியில், தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஸ்ஸி வான் டெர் டூசென் அக்ஷர் படேல் பந்தில் போல்டானார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 36 ரன்களில் வெளியேறினார். டேவிட் மில்லர் 10, வியான் முல்டர் 1, கேசவ் மகாராஜ் 14, பூரன் ஹெண்ட்ரிக்ஸ் லிசாட் வில்லியம்ஸ் என்று ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 45.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பவுலிங்கைப் பொறுத்த வரையில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டர் சுந்தர் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக கடண்ட 2017/28 ஆம் ஆண்டுகளில் ஒருநாள் தொடரை 5-1 என்று இந்தியா கைப்பற்றியிருந்தது. அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.