நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையான ஆசிய கோப்பை 2023 தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஆசிப் ஷேக் 58 ரன்களும், சோம்பால் கமி 48 ரன்களும், குஷால் புர்டெல் 38 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் விளையாடினர். போட்டியின் 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்த நிலையில் 23 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது. அதோடு, இந்திய அணி 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதோடு 1-5 ஓவர்கள் முதல் பவர்பிளே ஓவர்களாகவும், 6-19 2ஆவது பவர்பிளே ஓவர்களாகவும், 20-23 3ஆவது பவர்பிளே ஓவர்களாகவும் மாற்றப்பட்டது. மேலும், 3 பந்து வீச்சாளர்கள் 5 ஓவர்கள் வரையிலும் 2 பந்து வீச்சாளர்கள் 4 ஓவர்கள் வரையிலும் பந்து வீச அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மைதானத்திற்குள் வந்த ரோகித் சர்மா தனது மொத்த கோபத்தையும் நேபாள் பந்து வீச்சாளர்கள் மீது காட்டினார். ரோகித் சர்மா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவருக்கு பக்கபலமாக சுப்மன் கில் இருந்தார். சர்மா 39 பந்துகளில் தனது 49ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலமாக விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி 1046 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சாதனையையும் முறியடித்து, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காராவின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
ரோகித் சர்மா ஆசிய கோப்பை வரலாற்றில் 33 போட்டிகளில் 1080 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்திருக்கிறார். தொடக்க வீரராக 250 சிக்ஸர்கள் அடித்து சாதித்து காட்டியிருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக முறை அரைசதம் அடித்த வீரரும் இவரே. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 10 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரரும் இவரே.
இதே போன்று 47 பந்துகளில் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் இருவரும் கடைசி வரை நின்று அதிரடியாக ஆடினர். இறுதியாக 20.1 ஆவது ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். இது அவரது 22ஆவது ஒரு நாள் போட்டியில் அவர் பெறும் ஆட்டநாயகன் விருதாகும்.
அதோடு, சூப்பர் 4 சுற்றுக்கும் இந்தியா முன்னேறியது. வரும் 10 ஆம் தேதி நடக்கும் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது, கொழும்புவில் நடக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை எதிரொளி காரணமாக போட்டியானது வேறொரு மைதானத்திற்கும் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.