ஆர்சிபி - எல்.எஸ்.ஜி இடையேயான போட்டிக்கு பின் கம்பீர் - கோலி இடையே கடும் மோதல் மூண்டது. இதேபோல 10 ஆண்டுக்கு முன் 2013ம் ஆண்டு கம்பீர் - கோலி இடையே ஏற்பட்ட சண்டை தான் இன்றளவும் இருவரும் மோதிக்கொள்வதற்கு காரணம்.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. லக்னோவில் நடந்த ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 126 ரன்கள் அடித்தது. 127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய லக்னோ அணியை 108 ரன்களுக்கு சுருட்டி 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டிக்கு பின் விராட் கோலி - கௌதம் கம்பீர் இடையே களத்திலேயே கடும் சண்டை ஏற்பட்டது. போட்டிக்கு பின் விராட் கோலியிடம் லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் பேசிக்கொண்டிருக்க, அவருடன் (கோலி) என்ன பேச்சு என்கிற தொனியில் கைல் மேயர்ஸின் கையை பிடித்து இழுத்துச்சென்றார் கௌதம் கம்பீர். அதன்பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட, மற்ற வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.
கௌதம் கம்பீர் அவர் ஆடிய காலத்தில் ஆக்ரோஷமானவர். எதிரணி வீரர்களுடன் மல்லுக்கு நிற்பார். நியாயமான காரணத்திற்கே என்றாலும் கூட, சண்டைக்கு தயங்கியதே இல்லை கம்பீர். வீரராக இருந்தபோதுதான் சண்டை என்றால், பயிற்சியாளர் ஆனபின்னரும் அதே ஆக்ரோஷம் ஆவேசத்துடன் அதேபோலவே சண்டை போடுகிறார் கம்பீர்.
இருவருக்கும் இடையே நல்லுறவு தான் இருந்துவந்தது. முதல் மோதல் ஏற்பட்டது ஐபிஎல்லில் தான். 2013 ஐபிஎல்லில் கம்பீர் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தார். அப்போது 2013 ஐபிஎல்லில் ஆர்சிபி - கேகேஆர் இடையேயான போட்டியின்போது விராட் கோலியின் விக்கெட்டை கம்பீர் ஆக்ரோஷமாக கொண்டாடியதை கண்டு கோலி கொந்தளிக்க, பதிலுக்கு கம்பீரும் கோபப்பட, இருவருக்கும் இடையே களத்தில் கடும் மோதல் மூண்டது.
அந்த சம்பவத்திற்கு பின்னரே இருவருக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்கு முன் அப்படியில்லை. கோலி சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியில் அவரது முதல் சதத்தை அதே போட்டியில் கம்பீரும் பெரிய சதமடித்திருந்தார். இலங்கைக்கு எதிராக கடினமான இலக்கை கம்பீர் - கோலி இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது கம்பீருக்கு வழங்கப்பட்டது. ஆனால் இளம் வீரராக தனது முதல் சதத்தை விளாசிய விராட் கோலிக்கு அந்த விருதை வழங்கி ஊக்கப்படுத்தியவர் கம்பீர்.
அந்தளவிற்கு நல்லவர் கம்பீர். ஆனால் மிக நேர்மையாக தனது கருத்தை கூறக்கூடியவர் மட்டுமல்லாது அதனால் வரும் சண்டைகளில் சற்றும் தளராமல் ஈடுபடுவார். களத்திலும் மிகுந்த ஆக்ரோஷமான கம்பீர், எப்பேர்ப்பட்ட வீரருடன் எப்பேர்ப்பட்ட சண்டைக்கும் தயங்கியதேயில்லை. கம்பீர் - கோலி இடையே நல்லுறவு இருந்துவந்தது. 2011 உலக கோப்பை ஃபைனலில் கூட கம்பீருடன் சேர்ந்து கோலி 3வது விக்கெட்டுக்கு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருப்பார். அந்தவகையில் இருவருக்கும் இடையே நல்ல உறவுதான் இருந்தது. 2013 ஐபிஎல்லில் கம்பீர் - கோலி இடையேயான சண்டைதான் இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்
அதன்பின்னர் கோலியை சிலமுறை கம்பீர் பாராட்டியிருந்தாலும், பலமுறை அவரை மிகக்கடுமையாக சாடியிருக்கிறார். விராட் கோலி ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்காததை சுட்டிக்காட்டி விராட் கோலியின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்துவந்தார் கம்பீர். அதேவேளையில் விராட் கோலியும் பாராட்டியும் இருக்கிறார்.
ஆனாலும் இருவருக்கும் இடையேயான பனிப்போர் நீடித்தே வந்தது. தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் எண்ணம் விராட் கோலிக்கு இருந்தே வந்திருக்கும். அதற்கான வாய்ப்பிற்காகவும் நேரத்திற்காகவும் காத்திருந்திருப்பார். அதற்கான வாய்ப்பை நேற்றைய போட்டியில் கம்பீர் ஏற்படுத்தி கொடுக்க, இருவருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த மோதல் இனியும் எதிர்காலத்தில் தொடரவும் வாய்ப்புள்ளது.