சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய ஸ்டாண்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிமோட் கண்ட்ரோல் முலமாக இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவில் 2ஆவது பழமையான மைதானமாக திகழ்வது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியம் தான். இங்கு, ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், ரஞ்சி டிராபி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சேப்பாக்கம் மைதானம் ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், அண்ணா பெவிலியன் பகுதியான இடிக்கப்பட்டு தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்களின் இருக்கைகள் என்று முற்றிலும் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான், சேப்பாக்கம் மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 புதிய ஸ்டாண்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இதற்கு கலைஞர் எம் கருணாநிதி ஸ்டாண்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச் டுவைன் பிராவோ, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி மற்றும் அமைச்சர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த 2 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்ட பிறகு இங்கு 40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் 22 ஆம் தேதி இந்த மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டிக்கு புதிதாக திறக்கப்பட்ட ஸ்டாண்டுகளில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.