
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 24 ஆவது லீக் போட்டி இன்று டெல்லியில் நடந்தது. இதில், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து அதிகபட்சமாக 399 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 104 ரன்கள் குவித்தார். இதே போன்று கிளென் மேக்ஸ்வெல் 44 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 106 ரன்கள் குவித்தார்.
இந்தப் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலியா 42 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் விளாசியுள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நெதர்லாந்து அணியில் லோகன் வான் பீக் 10 ஓவர்கள் வீசி 74 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதே போன்று மற்றொரு வீரர் பாஸ் டி லீட் மோசமான சாதனை ஒன்றை இந்தப் போட்டியில் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற சாதனையை பாஸ் டி லீட் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி ஒரு நோபால், ஒரு வைடு உள்பட 115 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் மிக் லூயிஸ் 10 ஓவர்களில் 113 ரன்கள் கொடுத்துள்ளார். அதே போன்று ஆடம் ஜம்பா 10 ஓவர்கள் வீசி 113 ரன்கள் கொடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் தான் இவர்களது சாதனையை தற்போது பாஸ் டி லீட் முறியடித்துள்ளார். மேலும், இவரது ஓவர்களில் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.