ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பையின் 18ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் சரிந்து 5ஆவது இடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 18ஆவது லீக் போட்டி இன்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மைதானத்தில் நடந்தது. இதில், பாகிஸ்தான் முதலில் டாஸ் வென்று பந்து வீசியது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 259 ரன்கள் குவித்தது. இதில், மிட்செல் மார்ஷ் 121 ரன்களிலும், டேவிட் வார்னர் 163 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே பாகிஸ்தான் 367 ரன்கள் குவித்தது.
பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 134 ரன்கள் குவித்தனர். இந்த ஜோடி அதிக பவுண்டரி விளாசித் தள்ளியது. இதில் அப்துல்லா ஷபீக் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து நன்றாக விளையாடி வந்த இமாம் உல் ஹக் 71 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 70 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையிலும் இந்தப் போட்டியிலும் சொதப்பியுள்ளார். அவர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து சவுத் சகீல் 30 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. இப்திகார் அகமது 26 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 46 ரன்னிலும், உசாமா மிர் 0, முகமது நவாஸ் 14, ஹசன் அலி 8, ஷாகீன் அஃப்ரிடி 10 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கவே பாகிஸ்தான் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்கள் குவித்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திலிருந்து சரிந்து 5ஆவது இடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஆஸ்திரேலியா 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்த வரையில் பந்து வீச்சில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹசல்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் உலகக் கோப்பையில் 55 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக 71 விக்கெட்டுகள் கைப்பற்றி கிளென் மெக்ராத் முதலிடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 68 விக்கெட்டுகளுடன் 2 ஆவது இடத்திலும், லசித் மலிங்கா 56 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்திலும், வாசீம் அக்ரம் 55 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களில் ஆடம் ஜம்பா இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இப்படி தொடர்ந்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தானின் தோல்விக்கு அதிக முறை கேட்சுகள் கோட்டைவிட்டது தான். டேவிட் வார்னர் 10 ரன்களாக இருந்த போது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை உசாமா மிர் கோட்டைவிட்டார். மீண்டும் வார்னர் 105 ரன்களில் இருந்த போது உசாமா மிர் கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார். ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்களில் இருந்த போது கேப்டன் பாபர் அசாம் அவரது கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதே போன்று ஆஸ்திரேலியா வீரர்களும் சில கேட்சுகளை தவறவிட்டனர். எனினும், அவர்கள் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.