ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 286 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. இதில், டேவிட் வார்னர் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 96 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 74 ரன்களும், மார்னஷ் லபுஷேன் 72 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இதில், வாஷிங்டன் சுந்தர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு புறம் சிக்ஸரும், பவுண்டரியுமாக அடித்த ரோகித் சர்மா 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தனது 52ஆவது ஒரு நாள் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
கடைசியாக ரோகித் சர்மா 57 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உள்பட 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதே போன்று விராட் கோலி தனது 66ஆவது அரைசதத்தை அடித்த கையோடு 56 ரன்களில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து கேஎல் ராகுல் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அவர் 26 ரன்களில் வெளியேற சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது. ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து வெற்றி தேடிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை போராடிய ரவீந்திர ஜடேஜா 35 ரன்களில் வெளியேறினார். இறுதியாக இந்தியா 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் மட்டுமே எடுத்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள்:
கிறிஸ் கெயில் - 553
ரோகித் சர்மா – 551
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா வென்றது (போட்டிகள்):
3-2 - ஹோம், 1986 (மொத்த போட்டிகள் 6)
1-0 - ஹோம், 2010 (மொத்த போட்டிகள் 3)
3-2 - ஹோம், 2013 (மொத்த போட்டிகள் 7)
4-1 - ஹோம், 2017 (மொத்த போட்டிகள் 5)
2-1 - அவே, 2019 (மொத்த போட்டிகள் 3)
2-1 - ஹோம், 2020 (மொத்த போட்டிகள் 3)
2-1 - ஹோம் 2023 (மொத்த போட்டிகள் 3)