இலங்கைக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரை கைப்பற்றி 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட் வாஷ் செய்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2ஆவது போட்டியில் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்று தொடரை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று பல்லேகலேயில் நடைபெற்றது.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பத்திலிருந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10, சஞ்சு சாம்சன் 0, ரிங்கு சிங் 1, சூர்யகுமார் யாதவ் 8, ஷிபம் துபே 13 என்று வரிசையாக ஆட்டமிழந்தனர். சுப்மன் கில் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடி ரன்கள் எடுத்துக் கொடுக்கவே இந்தியா 100 ரன்களை கடந்தது. எனினும் கில் 39 ரன்களில் வெளியேற, ரியான் பராக் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த வாஷிங்டன் சுந்தர் 25 ரன்களும், ரவி பிஷ்னோய் 8 ரன்களும் எடுத்துக் கொடுக்கவே இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்தது.
வில்வித்தையில் அங்கீதா பகத் அதிர்ச்சி தோல்வி – பஜன் கவுர் 16ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!
இலங்கையைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் மகீஷ் தீக்ஷனா 3 விக்கெட்டுகளும், வணிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். சமிந்து விக்ரமசிங்கே, அசிதா ஃபெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர். இதையடுத்து 138 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். இதில், நிசாங்கா 26 ரன்களில் ஆட்டமிழக்க, குசால் ஃபெரேரா களமிறங்கினார். மெண்டிஸ் மற்றும் ஃபெரேரா இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 52 ரன்கள் குவித்தது. மெண்டிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வணிந்து ஹசரங்கா 3, சரித் அசலங்கா 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். குசால் ஃபெரேரா 46 ரன்களுக்கு நடையை கட்டினார். அப்போது இலங்கை 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்திருந்தது. கடைசியாக 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வீசினார். முதல் பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 2ஆவது பந்தில் ஒரு விக்கெட் கைப்பற்றி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை எடுத்தார்.
இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த சரப்ஜோத் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
2ஆவது பந்திலேயும் ஒரு விக்கெட் எடுக்கவே ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. 4ஆவது பந்தில் 1 ரன் எடுக்க, 5ஆவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த பந்தில் சூர்யகுமார் யாதவ் ரன் அவுட் செய்திருந்தால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றிருக்காது. எனினும், கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தில் 2 ரன்கள் எடுக்கப்படவே போட்டியானது டை ஆனது. இலங்கை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இலங்கை சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது. இதில் மெண்டிஸ் மற்றும் ஃபெரேரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வாஷிங்டன் சுந்தர் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை வைடாக வீச இலங்கைக்கு ஒரு ரன் கிடைத்தது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் இலங்கை ஒரு ரன் எடுத்தது. 2ஆவது பந்தில் ஃபெரேரா ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் பதும் நிசாங்கா ஆட்டமிழக்கவே இந்தியாவிற்கு 3 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், தீக்ஷனா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றியுள்ளது. மேலும், 2017 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு 3ஆவது முறையாக இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
முதல் முறையாக இந்தியா 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த போதிலும் டி20 போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியில் இந்திய ஸ்பின்னர்கள் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறனர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இருவருமே ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கின்றனர். டி20 கிரிக்கெட்டில் சமன் செய்யப்பட்ட போட்டிகளில் இந்தியா 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 4 சூப்பர் ஓவர் மற்றும் ஒரு போட்டி பவுல் அவுட் ஆகும்.