வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் ஒரு டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 546 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நடந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 17 ரன்களில் வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் ஆடியது. இதில், தொடக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். இதனால் முதல் விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவிக்கப்பட்டது.
இதில் குர்பாஸ் 125 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் உள்பட 145 ரன்கள் குவித்தார். இதே போன்று இப்ராஹிம் 119 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 331 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 332 ரன்கள் என்ற கடின இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. இதில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹ்மான் 69 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் ஒற்றைப்பட ரன்களில் வெளியேறவே, 43.2 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்து, 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.
பிறந்தநாள் கேக் வெட்டி செல்லப்பிராணிகளுக்கு கொடுத்த எம்.எஸ்.தோனி; வைரலாகும் வீடியோ!
இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பின் வங்கதேச அணி இங்கிலாந்திடம் மட்டுமே அதன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருந்தது. அதன் பிறகு வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை எல்லாம் வங்கதேசம் அசால்டாக வீழ்த்தி சொந்த மண்ணில் சாதனை படைத்தது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிய மண்ணில், வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்தது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் வரும் 11ஆம் தேதி நடக்கிறது.