ஆசிய கோப்பை விவகாரத்திற்கு தீர்வு சொன்ன அப்துல் ரசாக்! இவரா இப்படி பேசுறது? வியப்பில் ஆழ்ந்த கிரிக்கெட் உலகம்

By karthikeyan VFirst Published Feb 7, 2023, 8:18 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்தும் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அதற்கு அப்துல் ரசாக் கூறியுள்ள தீர்வு கிரிக்கெட் உலகையே பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பர இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை இந்தியாவிலும் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் தான் முடிவு எடுக்கும். அதன்படிதான் பிசிசிஐ செயல்பட முடியும். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதிக்காது என்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

IND vs AUS: கடைசி நேர ட்விஸ்ட்.. ஆஸி., அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம்! அந்த 2 பேரில் யாருக்கு இடம்?

ஜெய் ஷாவின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை தங்களிடம் இருக்கும்போது, ஜெய் ஷா தன்னிச்சையாக பேசியதற்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்ததுடன், எக்காரணத்தை முன்னிட்டும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தரமுடியாது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர விரும்பவில்லை என்றால், ஆசிய கோப்பையில் ஆடாமல் இருக்கட்டும். இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானும் கலந்துகொள்ளாது என்று பாக்., கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க, அண்மையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங் பஹ்ரைனில் நடந்தது. இந்த கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்ச் மாதம் மீண்டும் இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜாவின் கருத்தைத்தான்  இப்போதைய தலைவர் நஜாம் சேதியும் தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங்கில், பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து இந்திய அரசிடம் கலந்தாலோசித்து, அடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங்கிற்கு முன் பிசிசிஐ தெரியப்படுத்த வேண்டும். இந்திய அணி ஆசிய கோப்பையில் ஆட பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் ஆட பாகிஸ்தானும் வராது என்று நஜாம் சேதி தெரிவித்திருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிசிசிஐ அதிகாரம் மற்றும் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் வாரியம் என்பதால் பிசிசிஐ சொல்வதுதான் நடக்கும். எனவே ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கோ மாற்றப்பட வாய்ப்புள்ளது. 

IND vs AUS: டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அஷ்வினை நினைத்து அலறும் ஆஸி., தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா

பொதுவாக இந்திய கிரிக்கெட் அமைப்பு மற்றும் இந்திய வீரர்கள் மீது வன்மத்தை உமிழும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக், இந்த விவகாரத்தில் எதார்த்தத்தை பேசியிருக்கிறார். அது கிரிக்கெட் உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அப்துல் ரசாக், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. எனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நடப்பதுதான் கிரிக்கெட்டுக்கு நல்லது. அதனால் ஆசிய கோப்பையை துபாய்க்கு மாற்றுவதுதான் சிறந்த ஆப்சனாக இருக்கும்.  நீண்டகாலமாக இந்த பிரச்னை நீடித்துவருகிறது. இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து பேசி ஒரு முடிவெடுப்பது நல்லது என்று அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
 

click me!