
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 7, மிட்செல் மார்ஷ் 15, ஸ்டீவ் ஸ்மித் 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சரி, விக்கெட் விழுகிறதே இந்தியா ஜெயிச்சிரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியாக, ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.
இதன் மூலமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2ஆவது முறையாக இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இந்திய வீரர்கள் கண்ணீர்விட்டு அழுத காட்சியை காண முடிந்தது. ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் என்று ஒவ்வொருவரும் கண்ணீர் துளிகளுடன் காணப்பட்டனர்.
அவர்கள் மட்டுமின்றி நேரில் பார்த்த 1,30,000 ரசிகர்களும், தொலைகாட்சியிலும் பார்த்த ரசிகர்களின் கண்களில் கண்ணீர் துளிகள் தான். கிரிக்கெட் என்றாலே என்னவென்ற தெரியாத பச்சிளம் குழந்தைகளும், சிறுவர்களும் இந்திய அணியின் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அப்படி ஒரு சிறுவன் இந்தியாவின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் கதறி அழவே, அவனது கண்ணீரை உடைத்தபடியே அவனது அம்மா ஆறுதல் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.