
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இதில், முதலில் விளையாடிய 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6ஆவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியனானது.
இதுவரையில் நடந்த 10 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி முக்கியமான போட்டியில் இப்படியொரு தோல்வியை தழுவியுள்ளது. இதையடுத்து, விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் கண்கலங்கி நின்ற காட்சி காண்போரை வருத்தமடையச் செய்தது. போட்டிக்கு பிறகு ஓய்வறைக்கு சென்ற இந்திய வீரர்களுக்கு வழக்கம் போல் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கும் தருணம் வந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஒவ்வொருவரும் வலியும், வேதனையும் நிறைந்த மனதோடு வருத்தமாகவே இருந்தனர். சிறந்த பீல்டருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. ரவீந்திர ஜடேஜா அந்த விருதை வழங்கினார்.
அப்போது பேசிய திலீப் கூறியிருப்பதாவது: இதற்கு மேல் இந்திய அணி வீர்ரகளிடமிருந்து எதையும் என்னால் கேட்க முடியாது. எல்லாவற்றையும் முயற்சி செய்துள்ளோம். எனக்கு இது பெருமையளிக்கிறது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பீல்டிங் செய்துள்ளோம். அதுமட்டுமின்றி ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருந்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.