இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று பீல்டிங் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மிட்செல் மார்ஷ் 15 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் இருவரும் நிதானமாகவும், தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர். இறுதியாக டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 120 பந்துகளில் 15 பவுண்டரி உள்பட 4 சிக்ஸர்கள் உள்பட 137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மார்னஷ் லபுஷேன் 58 ரன்கள் எடுக்க, கிளென் மேக்ஸ்வெ 2 ரன்கள் எடுத்து வெற்றி தேடிக் கொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இதற்கு முன்னதாக, 1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றியுள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 8 முறை இறுதிப் போட்டிக்கு வந்துள்ள ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு 2ஆவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா துணை பிரதமர் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு டிராபியை வழங்கினர். அதன் பிறகு சாம்பியன்ஸ் புகைப்படம் எடுத்துக் கொண்ட ஆஸ்திரேலியா வீரர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்தனர். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் டிராபி மீது கால் வைத்துக் கொண்டும், கையில் பீர் பாட்டில் வைத்துக் கொண்டும் போஸ் கொடுத்துள்ளார்.
இதனைக் கண்ட ரசிகர்கள் டிராபியை மதிக்க தெரியாத அணியிடம் உலகக் கோப்பை டிராபியா என்று கேள்வி எழுப்பியதோடு எங்களுக்கு கிடைச்சிருந்தா பொக்கிஷமா பாத்திருப்போம் என்று விமர்சித்து வருகின்றனர்.