வெடிகுண்டுக்கு அருகே கிடக்கும் சிவகுமார் உடல் - நிபுணர்கள் வருகைக்காக போலீசார் காத்திருப்பு

First Published Jan 3, 2017, 3:48 PM IST
Highlights


புதுவை முன்னாள் அமைச்சர் சிவகுமாரை அவரது திருமண மண்டபத்துக்குள் வைத்து வெட்டியவர்கள் அவர் அருகில் வெடிகுண்டையும் போட்டுவிட்டு சென்றதால் அது வெடித்து விடுமோ என்ற பயத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்காக காத்திருக்கின்றனர்.

புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் ( 65).  ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது அமைச்சராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்கவில்லை. இதனால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

 அவர் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க.வில் சேர்ந்தார். நிரவி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வி அடைந்தார். புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள நிரவியில் வசித்து வந்தார். அங்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றை கட்டி வருகிறார். 

இன்று மதியம் 12 மணி அளவில்  அவர் நிரவியில் உள்ள  கட்டப்பட்டு வரும்  திருமண மண்டபத்தை பார்வையிட சென்றார். கார் வெளியே நின்று கொண்டிருந்தது. சிவகுமாருக்கு 2013 ஆம் ஆண்டு கொலை மிரட்டல் உள்ளதால் அவருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு உள்ளது. பாதுகாப்புக்கு வந்த காவலர் மண்டபத்துக்கு வெளியே இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர் காரின் மீது வெடிகுண்டை வீசி உள்ளது. பின்னர் காவலரை பார்த்து வெடிகுண்டை காட்டி மிரட்டி துரத்தியுள்ளது. பின்னர் மண்டபத்தின் உள்ளே நுழைந்த குமபல் சிவகுமாரை இழுத்து போட்டு சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு ஓடியுள்ளது. 

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிவகுமார் பலியானார். ஓடும்போது அந்த கும்பல் சிவகுமார் உடல் அருகே வெடிகுண்டை வீசிவிட்டு சென்றுள்ளது.  இதனால் குண்டுக்கு அருகில் கிடக்கும் சிவகுமார் உடலை மீட்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வந்த பிறகே குண்டு அகற்றப்பட்டு பின்னர் உடல் அகற்றப்ப்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

காரைக்காலில் சாராய கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில் ஏற்கனவே அடுத்தடுத்து 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவக்குமாருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இதனால் அந்த கும்பல் தான் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

click me!