"துணை சபாநாயகர் லெட்டர் பேடில் சசிகலாவுக்கு ஆதரவு" - தம்பிதுரைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

First Published Jan 2, 2017, 2:51 PM IST
Highlights


துணை சபாநாயகர் லட்டர் பேடில் சசிகலா முதல்வராக வேண்டும் என தம்பிதுரை கோரிக்கை வைத்திருப்பது வெட்ககேடானது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது பதவியை பயன்படுத்தாமல் துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தம்பிதுரை அறிக்கைகள் கொடுக்க வேண்டும்”

“முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்” என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பித்துரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். 

இப்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பித்துரை “தமிழக முதலமைச்சர் பதவியை” சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் அவர்கள் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, “சசிகலா முதல்வராக வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது. 

குறிப்பாக “துணை சபாநாயகர்” லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும்.

ஆகவே, ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் திரு. மு. தம்பித்துரை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். 

அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

click me!