ANS Prasad : கலைகளை வளர்த்த தமிழகம்.. கொலைகளை வளர்க்கும் தமிழகமாக மாறியது ஏன்? - ஏ.என்.எஸ்.பிரசாத் காட்டம்!

By Ansgar R  |  First Published May 5, 2024, 11:40 PM IST

ANS Prasad Slams DMK : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தன் உயிருக்கு ஆபத்து என மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரசாத் அவர்கள்.


திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், அவருக்கு சொந்தமான தோட்டத்திலேயே எரித்து  படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதில் இருந்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

இந்த படுகொலையை சாதாரணமான கொலை சம்பவமாக எடுத்துக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர் அப்பகுதியில் செல்வாக்கானவர். காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர். நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு நன்கு தெரிந்தவர். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. அத்தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி இருந்தது. கடைசி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், கட்சிக்குள்ளையே பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளன.

Latest Videos

undefined

Accident : நாங்குநேரி அருகே நடந்த கோர விபத்து - பைக் மீது பின்னல் வந்த கார் மோதி இருவர் உடல் நசுங்கி பலி!

கொல்லப்பட்ட ஜெயக்குமார் மாவட்ட தலைவர் என்பதால் நெல்லை தொகுதி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். ராகுல் காந்தி கலந்து கொண்ட பொதுக்கூட்ட வரவு செலவு கணக்குகள் மற்றும் தேர்தல் நிதி விவகாரங்களில் அவருக்கு முக்கிய தலைவர்களுடன் முன் விரோதம், கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் நடந்து இரண்டு வாரங்களில் அவர் கொல்லப்பட்டிருப்பது பயங்கர அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடிதம் மூலம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். அதில், தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் இருவர் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். 

ஒரு அரசியல் கட்சியின் மாவட்டத் தலைவர் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தால் அது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படி விசாரணை நடத்தி இருந்தால் ஜெயக்குமாரின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்தும் காவல்துறை அலட்சியம் காட்டியது ஏன் என்ற கேள்வி தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் எழுகிறது. 

அது மட்டுமல்லாது, ஜெயக்குமார் கடத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு கொல்லப்பட்டுள்ளார். ஜெயக்குமார் கடத்தப்பட்டது குறித்து அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. நெல்லை மாவட்ட காவல்துறை ஏன் இவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டது என்ற கேள்விக்கு முதலில் விடை காண வேண்டும்.

உயிருக்கு அச்சுறுத்தல் என்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவல்துறை திமுகவின் கட்டுக்குள் சென்று விடும். திமுகவில் மேல் மட்டத்திலிருந்து, கிளைச் செயலாளர்கள் வரை அனைவருமே காவல்துறையை கட்டுப்படுத்துவார்கள். எந்த வழக்காக இருந்தாலும், குறிப்பாக அரசியல் தொடர்பான வழக்குகளாக இருந்தால் திமுகவினர் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் காவல்துறையினர் செயல்படுத்துவார்கள். 

திமுக ஆட்சியில் எழுதப்படாத சட்டம் இது. அதனால்தான், கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அனைவரும் திமுகவினரோடு நெருக்கமாகி விடுவார்கள்.  அதன் விளைவு தான் திமுக மாவட்டப் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு திமுகவில் மேல்மட்டம் வரை அபரிமிதமான செல்வாக்கு இருந்தது அம்பலமானது.

எனவே, திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை விசாரித்தால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் உண்மை வெளிவர வாய்ப்பே இல்லை. எனவே, இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

ஜெயக்குமார் எழுத்து மூலமாக புகார் அளித்தும் காவல்துறை அலட்சியம் காட்டியது ஏன்?, நெல்லை மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த புகார் கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். எனவே, இது தொடர்பாக காங்கிரஸ் மாநிலத் தலைமையிடம் அவர் ஏதேனும் புகார் அளித்தாரா? அது தொடர்பாக கட்சிக்குள் விசாரணை நடத்தப்பட்டதா? காங்கிரஸ் கட்சியில் சிறு பிரச்சனை என்றாலும்கூட டெல்லி மேலிடத்திற்கு புகார் கடிதங்களை அனுப்புவார்கள். அப்படி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு ஜெயக்குமார் புகார் அளித்துள்ளாரா? அப்படி புகார் அளித்திருந்தால் அதில் ஏதேனும் முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் உண்மை வெளிவரும். 

திருப்பூர் பல்லடத்தில்  பத்திரிகையாளர் மீதுகொலை வெறி தாக்குதல், தற்போது திருநெல்வேலியில் சுரங்கத் துறை மின்வாரிய ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் மீது கொலை முயற்சி என ஒவ்வொரு நாளும் கலைகளை வளர்த்த தமிழகம் கொலைகளை நடத்தும் தமிழகமாக மாறி உள்ளது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்கா விட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலுமாக சீரழிந்து விடும். யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு என்பதே இருக்காது என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.. ஆன்லைனில் பெறுவது எப்படி? சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை!

click me!