முதல்வர் இலாகா மாற்றம் - மு.க. ஸ்டாலின் வரவேற்பு

First Published Oct 12, 2016, 12:54 PM IST
Highlights


முதல்வர் இலாகாக்களை ஓபிஎஸ்சுக்கு மாற்றி கவர்னர் அறிவித்துள்ளதற்கு சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது அறிக்கை:

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று திரும்பும் வரை தமிழகத்தின் நலன் கருதி பொறுப்பு முதலமைச்சர் ஒருவரையோ அல்லது அவருக்கு அடுத்துள்ள மூத்த அமைச்சரையோ நிர்வாகப் பணிகளை கவனிக்க நியமிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞரும், நானும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தோம்.

"அப்படியெல்லாம் தேவையில்லை" என்று மாநிலத்தின் நலன் மற்றும் மக்களின் நலன் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் சிலர் பேட்டி கொடுத்திருந்தாலும், தமிழக ஆளுநர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை நிதியமைச்சராக இருக்கும் மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வதற்கு ஒதுக்கி ஆணை பிறப்பித்திருக்கிறார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கு மாண்புமிகு ஓ. பன்னீர் செல்வம் தலைமை தாங்குவார் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையின் பேரில் இந்த நிர்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழக ஆளுநரே தெரிவித்துள்ளார்.  நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் மாநிலத்தை காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என்று பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்திருக்கின்றன. காவிரி தொழில் நுட்ப குழு காவிரி டெல்டா விவசாயிகளை சந்தித்து விட்டுச் சென்றுள்ளது.

வருகின்ற 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.  வட கிழக்கு பருவ மழை தொடங்கவிருக்கிறது. இது போன்ற மாநிலத்தின் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளை கலந்து ஆலோசிக்க பொறுப்புள்ள அமைச்சரவை இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அந்த அமைச்சரவைக்கு ஒரு தலைவர் தேவை. அப்போதுதான் அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட்டி மாநில நலன் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். இந்த சூழ்நிலையில் மாநில நிர்வாக நலன் கருதி தமிழக ஆளுநர் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் வரவேற்கிறேன்.

click me!